கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா வெள்ளாளங்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரியமினிக்கம் கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ள குளத்தின் உள்ளே தனியார் காற்றாலை நிறுவனத்துக்கு சொந்தமான 7 மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின் கம்பிகள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. கிராமத்துகுளத்தில் மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து நேற்று சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் மின் கம்பிகளை பொருத்தும் பணியில் ஈடுபட வந்துள்ளனர். உடனே கிராம மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதுசரவணன் (27) என்பவர் இங்குள்ள மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக சில பெண்களும் வேறு ஒரு மின் கோபுரங்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகளும் போலீசாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பிறகு குளத்தில் அமைக்கப்பட்ட 2 சிறிய டவர்கள் அகற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
