பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சமவேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்:

தமிழ்நாட்டு முதலமைச்சர் இன்று பொங்கல் வாழ்த்து சொல்லிய பிறகு, அவரை சந்தித்தோம். எங்களை பார்க்கும் போதெல்லாம் பகுதி நேர மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் என்ன ஆனது. அது சார்ந்த எந்த மாதிரியான பேச்சு வார்த்தைகள் நடந்தது என்று கேட்டார். பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து 4 வருடமாக வைத்திருக்கிற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களை அழைத்துப் பேசியதில் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள். அவர்கள் ரூ. 5 ஆயிரம் பணிக்கு சேர்ந்தார்கள். தற்போது அது ரூ. 12,500 ஆக உயர்ந்துள்ளது. இதை வைத்து எங்களால் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்பது அவர்களது நியாயமான கோரிக்கை.

எஸ்.எஸ்.ஏ. நிதி ஒன்றிய அரசு நமக்கு தர வேண்டியது. ஆனால் புதிய கல்விக்கொள்கையில் கையெழுத்து போட்டால் தான் பணம் தருவேன் என்று சொல்லி, பள்ளிக் கல்வித் துறைக்கு வரவேண்டிய ரூ. 3,548 கோடி தற்போது வரை வரவில்லை. அந்த நிதியை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, உங்கள் கொள்கை முடிவுக்கெல்லாம் கட்டுப்படமாட்டோம் என்று முதலமைச்சர் உறுதியான தெரிவித்தார். அந்த நிதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதால் கூடுதல் நிதி நெருக்கடி செலவீனமாக இருந்தாலும், நம்மை நம்பியுள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்தாக வேண்டும். பொங்கல் வாழ்த்து செய்தி வெறும் வாழ்த்தகம் மட்டுமல்லாமல், மகிழ்ச்சி என்பது வார்த்தையாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

பொங்கல் தினத்தன்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது கனத்த இதயத்தை தருகிறது இன்று தமிழ்நாடு முதல்வர் சொல்லி அதை சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். அதனால் தலைமைச் செயலகத்தில் என்னையும் அதிகாரிகளும் அழைத்துப் பேசினார். அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று நான் கூறினேன்.ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.பொங்கல் பண்டிகை தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15,000ஆக உயர்த்தப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும். கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.200 பேர் மறைந்துள்ளார்கள் அவர்களின் குடும்பங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று கோரிக்கையும் வைத்துள்ளார்கள். அதையும் தமிழ்நாட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்போம்.

மருத்துவ காப்பீடு தொடர்பாகவும் முதலமைச்சரிடம் விவாதித்தோம். அரசு ஊழியர்கள் சார்ந்து பின்பற்றப்படும் மருத்துவ காப்பீட்டில் இவர்களை இணைத்து விடலாம் என்று சொல்லி உள்ளார். மே மாதம் தங்களுக்கு ஊதியம் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன்படி, மே மாதம் மட்டும் அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஊதியமாக நிர்ணயிக்க முதலமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: