மாதவரம்: மாதவரம், மணலி ஏரிகள் ரூ.24.41 கோடி செலவில் புனரமைத்து, பொழுதுபோக்கிற்காக சுற்றுலா தளமாக மாற்றி படகு குழாம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பணி நடைபெற்று வந்தன. அதன்படி 2 ஏரிகளையும் தூர்வாரி, கரையமைத்து, நடைபாதை, இருக்கைகள், அலங்கார விளக்கள், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, முகப்பு வளைவு, காத்திருப்போர் அறை, உணவகம், பாலூட்டும் அறை என பல்வேறு அம்சங்களுடன் பணிகள் நடைபெற்றது.
மேலும் படகு சவாரி விடும் வகையில் மோட்டார், கால்மிதி படகுகள், ரைடர் படகுகள் கொண்டு வரப்பட்டு மேடை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மாதவரம் மற்றும் மணலி ஏரியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு 2 ஏரிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து படகு சவாரியை செய்து துவக்கிவைத்தார். இதையடுத்து 2 ஏரிகள் அருகிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு, பொதுமக்கள், தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார்.
இதில், மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், எம்எல்ஏக்கள், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செய லாளர் மாதவரம் சுதர்சனம், மாநில மீனவரணி துணை தலைவர் கே.பி.சங்கர், கலாநிதி வீராசாமி எம்பி, மண்டலக்குழு தலைவர்கள் நந்தகோபால் ஏ.வி.ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர்கள் தேவேந்திரன், குமாரசாமி, செயற்பொறியாளர் ஆனந்தராவ், கவுன்சிலர் சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
