பொள்ளாச்சி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி பகுதிகளில் பொங்கல் பானை விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களாக ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலக்குறிச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் சிங்கராம்பாளையம், பகவதிபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் இரண்டு மாதத்திற்கு முன்பே பானை தயாரிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டனர். ஆனால், அடிக்கடி மழையால் சரியான நேரத்தில் உலர வைக்க முடியாததால், அதன் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், களிமண்ணால் செய்யப்படும் பானைக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பலர் ஆர்டர் கொடுத்து வாங்கிச்செல்கின்றனர். சிறியது முதல் பெரிய அளவிலான பாணை தயாராகி, விற்பனைக்காக மார்க்கெட்டுகளுக்கு வரப்பெற்றுள்ளது. நாளை (15ம் தேதி) பொங்கல் பண்டிகை என்பதால், பொள்ளாச்சி மார்க்கெட் பகுதி மற்றும் நகரில் உள்ள பல வீடுகளில் விற்பனைக்காக அடுக்கி வைத்துள்ளனர்.
அதனை, நகர் மற்றும் கிராம பகுதியை சேர்ந்த பலரும் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர். ஒரு பானை ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனையாவதாக, தொழிலாளர்கள் தெரிவித்தனர். அதுபோல, நகரில் கடைவீதி, மார்க்கெட் பகுதி மற்றும் வெங்கடேசா காலனி, மகாலிங்கபுரம், கோவை ரோடு, பஸ் நிலைய பகுதி, பாலக்காடு ரோடு, கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் வண்ண வண்ண கோலப்பொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனையும் நகரம் மற்றும் கிராம பகுதியினர் தங்கள் விருப்பத்திற்கேற்ப உரிய விலை கொடுத்து வாங்கிச்சென்றனர்.
