பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டது: காங். நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

டெல்லி: பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸின் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எம்.பி.க்களிடையே சோனியா காந்தி பேசினார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து கடந்த 15ம் தேதி 15 எம்.பி-க்களும் டிச. 18 அன்று 78 எம்.பிக்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நேற்று மக்களவையில் 49 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் குளிர்கால கூட்டத்தொடரில் மீதமுள்ள நாட்களில் பங்கேற்க முடியாது. மேலும், இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்களின் எண்ணிக்கை 142-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சன்விதான் சதன் மைய மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் சிபிபி தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், நியாயமான கோரிக்கைகளை எழுப்பியதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ முடியாதது. பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த சம்பவத்தை மோசமாக கையாண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு விட்டது: காங். நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: