கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தாம்பரத்தில் இன்று மாநில அளவிலான கபடி போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்

தாம்பரம்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தாம்பரத்தில் மாநில அளவிலான கபடி போட்டியை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தாம்பரம் மாநகர திமுக மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் வரவேற்பில், மேற்கு தாம்பரம் டி.டி.கே.நகர் பகுதியில் உள்ள கலைஞர் திடலில் இன்று (5ம்தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த மாநில அளவிலான கபடி போட்டியானது தொடர்ந்து (5, 6, 7ம் தேதி) 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியை திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில், டி.ஆர்.பாலு எம்பி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். இந்த கபடி போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து கபடி விளையாட்டு வீரர்கள் வந்து பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகளை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும்படி பிரம்மாண்ட இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டியின் இறுதி நாளான 7ம் தேதி மாலை வெற்றிபெற்ற அணிகளுக்கு டி.ஆர்.பாலு எம்.பி பரிசுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், விழா மேடை, இருக்கைகள், மின் விளக்குகள், எல்.இ.டி திரை அமைக்கும் பணிகளை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா நேற்று நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தாம்பரத்தில் இன்று மாநில அளவிலான கபடி போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: