ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே. கட்சி வேட்பாளர்கள் மாற்றம்: சந்திரபாபு நாயுடு உருவபடம் எரிப்பு

திருமலை: ஆந்திராவில் நடைபெற உள்ள தேர்தலில் 4 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை சந்திரபாபு நாயுடு மாற்றி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவபடம் எரிக்கப்பட்டது. ஆந்திராவில் வரும் மே 13ம்தேதி சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 144 சட்டசபை மற்றும் 17 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடுகிறது. இந்த வேட்பாளர்களுக்கு அதன் தலைவர் சந்திரபாபு ‘பி’ படிவங்களை நேற்று வழங்கினார்.

இதற்காக ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வேட்பாளர்கள் அமராவதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் அலுவலகத்திற்கு வந்தனர். ​​தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, அவர்களிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்சியின் பி படிவத்தை வழங்கினார். பின்னர் மாநிலத்தில் மறுசீரமைப்புக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறி வேட்பாளர்களுடன் சேர்ந்து சந்திரபாபுநாயுடு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய வியூகம் குறித்தும், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்று மக்களவைக்கும், சட்டசபைக்கும் கண்டிப்பாக வர வேண்டும் என்றார்.

இதற்கிடையில் 5 தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை மாற்றினார். உண்டி தொகுதி ரகுராமனுக்கும், பாடேரூ தொகுதி முன்னாள் எம்எல்ஏ கிட்டி ஈஸ்வரிக்கும், மடக்கசீரா தொகுதி எம்.எஸ்.ராஜூக்கும், வெங்கடகிரி தொகுதி குருகுண்டலா ராமகிருஷ்ணாவிற்கும் வழங்கப்பட்டது. மேலும் ஏற்கனவே வேட்பாளர் அறிவிக்கப்பட்ட டெண்டுலூர் தொகுதியிலும் வேட்பாளர் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உருவ படம் எரிப்பு
ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டம், மடக்கசீரா சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சுனில்குமார் போட்டியிட இருப்பதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மடக்கசீரா தொகுதியில் சுனில்குமாருக்கு பதில் எம்.எஸ்.ராஜுவை சந்திரபாபு நாயுடு வேட்பாளராக அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏ ஈரண்ணா ஆதரவாளர்கள் கட்சியின் அலுவலகத்தில் இருந்த சந்திரபாபு புகைப்படம், கட்சி பேனர்களை சாலையில் வீசி தீ வைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே. கட்சி வேட்பாளர்கள் மாற்றம்: சந்திரபாபு நாயுடு உருவபடம் எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: