மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இம்முறை 280 புதுமுக எம்பிக்கள்: 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 280 எம்பிக்கள் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைய உள்ளனர். 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவைக்கு இம்முறை 52 சதவீதம் பேர் புதுமுக எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 பேர் முதல் முறை எம்பிக்கள். இவர்களில், மீரட் தொகுதியில் வென்ற ராமாயணம் டிவி சீரியலில் ராமராக நடித்த நடிகர் அருண் கோவில், அமேதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியை வென்ற காங்கிரசின் கிஷோரிலால் சர்மா, நகினா தொகுதியில் வென்ற பீம் ஆர்மி தலைவர் அசாத் சமாஜ் கட்சியின் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

நடிகர்களில் சுரேஷ் கோபி (திருச்சூர்), கங்கனா ரனாவத் (மண்டி), ஜூன் மாலியா (மெதினிபூர்), சயானி கோஸ் (ஜாதவ்பூர்), ரச்சனா பானர்ஜி (ஹூக்ளி) ஆகியோர் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளனர். மாநிலங்களவை எம்பியாக இருந்த அனில் தேசாய் (சிவசேனா உத்தவ் கட்சி), மிசா பாரதி (ஆர்ஜேடி), பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா, பிரஷோத்தம் ரூபாலா (பாஜ கட்சியினர்) ஆகியோர் இம்முறை மக்களவையின் புதுமுக எம்பிக்களாகி உள்ளனர்.

ராஜ வம்சத்தை சேர்ந்த சத்ரபதி சாஹூ( கோல்ஹாபூர்), யதுவீர் கிருஷ்ணதத்தா சமராஜா வாடியார் (மைசூர்), கீர்த்தி தேவி தேப்பர்மன் (திரிபுரா கிழக்கு) ஆகியோரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (தம்லுக்), தொழிலதிபர்கள் உதய் ஸ்ரீனிவாஸ் தங்கெல்லா (காக்கிநாடா) ஆகியோரும் புதுமுக எம்பியாகி உள்ளனர். புதுமுக எம்பிக்களில் லோக்ஜனசக்தி கட்சியின் சமஸ்திபூரில் வெற்றி பெற்ற சம்பாவி (25) இளம் வயதினராக உள்ளார்.

மொத்த எம்பிக்களில் 93 சதவீதம் பேர் அதாவது 504 பேர் கோடீஸ்வரர்கள். இதுவே 2019 தேர்தலில் 88 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாக இருந்தனர். அதிகபட்சமாக குண்டூர் தொகுதி தெலுங்கு தேசம் எம்பி சந்திரசேகர் பெம்மாசனி ரூ.5,705 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார். 42 சதவீதம் பேர் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்கள். வெறும் 1 சதவீதம் பேரின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ.20 லட்சத்துக்கு குறைவாக உள்ளது.

* 105 பேரின் கல்வித்தகுதி 5 முதல் 12ம் வகுப்பு வரை

* வெற்றி பெற்ற எம்பிக்களில் 19 சதவீதம் பேர் அதாவது 105 பேரின் கல்வித் தகுதி 5 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே. 420 பேர் அதாவது 77 சதவீதம் பேர் பட்டதாரிகள்.

* வெற்றி பெற்ற எம்பிக்களில் 46 சதவீதம் பேர் (233) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

* மொத்தம் 41 கட்சிகளில் இருந்து 543 எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2019ல் 36 ஆக இருந்தது. தேசிய கட்சிகள் சார்பில் 346 பேரும், மாநில கட்சிகள் சார்பில் 179 பேரும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் இருந்து 11 பேரும், சுயேச்சைகள் 7 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

* 18வது மக்களவையில் தேர்வான எம்பிக்களின் சராசரி வயது 56.

* 65.79% வாக்குப்பதிவு
இம்முறை 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தலில் சராசரி வாக்குப்பதிவு 65.79 சதவீதம் என தேர்தல் ஆணையம் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019ல் 67.40 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போது 91.20 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர் எண்ணிக்கை 96.88 கோடியாக அதிகரித்துள்ளது.

The post மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இம்முறை 280 புதுமுக எம்பிக்கள்: 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: