விருதுநகர் தொகுதியில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: பிரேமலதா பேட்டி

சென்னை: விருதுநகர் தொகுதியில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிரபாகரன் தோல்வி அடையவில்லை, தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். வீழ்ச்சி அடையவில்லை வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. வரும் காலங்களில் அதிமுகவுடன் இணைந்து தேமுதிக வீறுநடை போடும். பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தால் அத்தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம்.

13வது சுற்றுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையில் தவறுகள் நடந்துள்ளது. தபால் ஓட்டு எண்ணிக்கையிலும் சூழ்ச்சி நடந்துள்ளது. மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அனுப்பியுள்ளோம். விருதுநகர் தொகுதியில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். ஜனநாயக திருவிழா என்று கூறும் தேர்தல் ஆணையம் விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை சில மணி நேரம் முடக்கியது ஏன்? இதற்கான உரிய நீதியை தேர்தல் ஆணையம் எங்களுக்கு தரவேண்டும் என்றார். தொடர்ந்து, விஜயபிரபாகரன் கூறுகையில், ‘மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா, அவ்வாறு நடத்தப்பட்டால் அதில் நான் வெற்றி பெறுவேனா என்று காலம்தான் பதில் சொல்லும். எனக்கு வாக்களித்த விருதுநகர் மக்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

* தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்
விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில் நிறைய முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு நேற்று முன்தினம் இ-மெயில் மற்றும் ரிஜிஸ்டர் தபாலும் அனுப்பி இருந்தோம். தற்போது தேர்தல் முறைகேடு குறித்து நேரில் புகார் மனு அளித்திருக்கிறோம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, நேற்று பத்திரிகையாளர்களிடம் எந்தவிதமான புகார் மனுவும் பெறப்படவில்லை என்று கூறியுள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவே இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி என மூன்று பேருக்கும் மெயில் அனுப்பி இருக்கிறோம். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேரடியாக எங்களை பார்க்க மறுத்துவிட்டார். அவருக்கு கீழ் உள்ள அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். விருதுநகரில் 4ம் தேதி இரவு 9 மணிக்கெல்லாம் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து தேமுதிக வேட்பாளர், முகவர்களை எல்லாம் வெளியில் அனுப்பி விட்டார்கள். 4379 ஓட்டில் மாணிக்தாக்கூர் வெற்றி பெற்றுவிட்டார் என்று கூறி வெளியில் அனுப்பி விட்டார்கள். ஆனால் நள்ளிரவு 1 மணிக்குத்தான் அவருக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இடையில் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post விருதுநகர் தொகுதியில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: