அதிமுக ஆட்சி கால அவலம்

திமுகவின் திராவிட மாடல் ஆட்சி வரும் முன்பு 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் எத்தனையோ முறைகேடுகள் நடந்தன. தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைத்துவிட்டு பெயரளவுக்கு ஆட்சி நடத்திய பெருமை அதிமுகவுக்கு உண்டு. தற்போது வெளியாகியுள்ள இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையிலும் அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதிமுக அரசு, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. தகுதியற்ற பயனாளிகளுக்கு 3,354 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதில், ரூ.50.28 கோடி முறைகேடாக செலவு செய்யப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் அதிமுக அரசால் ரூ.1,515 கோடி நிதியை கேட்டுக்கூட பெற முடியாத சூழலும் நிலவியுள்ளது. இத்திட்டத்தில் 2016 முதல் 2021 வரை 5.08 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வாங்கிவிட்டு, அதிமுக அரசு 2.79 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டிக் கொடுத்தது. தகுதியுடைய பயனாளிகளை சேர்க்காமலும், ஆதிதிராவிட பயனாளிகளை சேர்ப்பதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகவும், வீடுகளை ஒப்படைப்பதில் முறைகேடுகள் காரணமாகவும் அதிமுக அரசால் உரிய நேரத்தில் நிதிகளை பெற முடியாமல் போனது.

கருவறை தொடங்கி கல்லறை வரை ஊழல் நடத்திய அதிமுக அரசு, சாலைகளை மேம்படுத்துவதிலும் முறைகேடுகளை நிகழ்த்தியது. 2017ல் ரூ.3,348 கோடியில் அறிவிக்கப்பட்ட 7,964 கிலோ மீட்டர் ஊராட்சி சாலைகளை மேம்படுத்தும் பணிகள் 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் மேம்படுத்தப்படாத காரணத்தால், நிதி விரயம் ஏற்பட்டது. இப்பணிக்களுக்கான முன்மொழிவை அரசிடம் சமர்ப்பிக்கவே 3 ஆண்டுகாலம் எடுத்து கொண்டனர். இதனால் பணிகளை கால கெடுவுக்குள் முடிக்க முடியாமல் போனது என தணிக்கைத்துறை அதிமுக அரசின் மெத்தன போக்கை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையிலும் தேவையற்ற நிதி விரயம் ஏற்பட்டது. மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குகிறோம் என கூறி கொண்டு ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்தனர். கடந்த 2017 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் 80 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் படிக்கும்போதே மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. பல மாணவர்கள் தங்கள் மேல்நிலைக்கல்வியை முடித்த பின்னர் போராட்டங்கள் நடத்தியே மடிக்கணினிகளை பெற வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மடிக்கணினிகளுக்காக ரூ.68 கோடியே 51 லட்சம் பணம் பயன்படுத்தப்படாமல் முடக்கப்பட்டதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காலணிகள் மற்றும் பள்ளி பை விநியோகத்தையும் அதிமுக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை. 2019-20ம் ஆண்டின் இறுதியில் 3.46 லட்சம் காலணிகள் எவ்வித பயனும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. பள்ளி பைகளை பொறுத்தவரை தேவைக்கு மீறி 4.88 லட்சம் பைகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டதால், ரூ.7.28 கோடி வீணானது. இந்திய கணக்காய்வு துறை அறிக்கையில் அதிமுக அரசு மக்கள் நல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டியதோடு, அதில் பல்வேறு முறைகேடுகளை நிகழ்த்தியதும் அம்பலமாகியுள்ளது.

The post அதிமுக ஆட்சி கால அவலம் appeared first on Dinakaran.

Related Stories: