மம்தாவை தொடர்ந்து பவார் மாறுபட்ட கருத்து மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமாருடன் கார்கே அவசர ஆலோசனை: தொலைபேசில் தொடர்பு கொண்டு பேச்சு

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் மம்தாவை தொடர்ந்து சரத்பவார் மாறுபட்ட கருத்து தெரிவித்து இருப்பதால் மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், உத்தவ் தாக்கரேயுடன் கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி உள்ளார். அதானி விவகாரத்தில் நாடாளுமன்றகூட்டுக்குழு விசாரணை கேட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன. 19 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டங்கள் நடத்தின. இதற்கிடையே அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்பதில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இடையேயும் மாறுபட்ட கருத்து உருவாகி உள்ளது. அவர்கள் உச்ச நீதிமன்ற குழு விசாரணை போதும் என்று தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதை சமாளிக்கவும், எதிர்க்கட்சிகள் இடையே விரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசத் தொடங்கி உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நாடு முழுவதும் உள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் சில திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதை தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடனும் மல்லிகார்ஜூன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய கூட்டம் நடத்த கார்கே ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

The post மம்தாவை தொடர்ந்து பவார் மாறுபட்ட கருத்து மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமாருடன் கார்கே அவசர ஆலோசனை: தொலைபேசில் தொடர்பு கொண்டு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: