ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நாளை மறுநாள் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நாளை மறுநாள் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக கருதப்படும் நடிகரும் பாஜ ஓபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷ் ஆஜராக, பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மேலும் தனக்கு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெறுமாறு உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த ஆர்.கே.சுரேஷ் நாளை மறுநாள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக உள்ளார். மோசடி வழக்கில் தொடர்புடைய ஆர்.கே.சுரேஷ் தலைமறைவான நிலையில் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. லுக்அவுட்டில் பிறப்பித்திருந்ததால் சென்னை வந்த ஆர்.கே.சுரேஷை விமான நிலையத்தில் பிடித்து வைத்து குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளதாக குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் ஆர்.கே.சுரேஷ் தகவல் தெரிவித்தார். ஆர்.கே.சுரேஷ் உறுதியை அடுத்து விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கினர். 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ.2438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடியில் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்களுடன் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவானார். இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நாளை மறுநாள் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை மேற்கொள்ளபட உள்ளது.

The post ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக நாளை மறுநாள் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: