வரலாறு பேசும் நாடாளுமன்ற கட்டிடம் அன்றும்… இன்றும்… என்றும்!: 1927ம் ஆண்டு முதல் கடந்து வந்த பாதை

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ரூ1,250 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் ‘புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்றம்’ கட்டப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜ அரசு பெருமிதம் பேசி வருகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுவரையிலும் சுதந்திர இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்து வந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்ப்போம்… இந்தியாவின் ஜனநாயகக் கோயிலாக வர்ணிக்கப்படும் பழைய நாடாளுமன்ற கட்டிடம், ஆங்கிலேயர்களின் 900 ஆண்டு கால ஏகாதிபத்திய ஆட்சியின் சாட்சியாகவும், சுதந்திரத்திற்காக பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோரால் வீசப்பட்ட குண்டுகளின் சத்தத்தையும் கேட்டுள்ளது.

கடந்த 1920ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்ற திட்டமிட்டனர். இதற்காக நிர்வாக தலைநகராக டெல்லியை உருவாக்க ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஆட்சியின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கிலாந்து கட்டிடக்கலை வல்லுநர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரிடம் புதிய தலைநகர் வடிவமைப்பு பணி வழங்கப்பட்டது. ரைசினா ஹில்ஸ் பகுதியில் பிரிட்டிஜ் ராஜ்ஜியத்தின் புதிய தலைநகரான புதுடெல்லியை, வைஸ்ராயின் வீடு (இப்போதைய ராஷ்டிரபதி பவன்), நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் ஆகியவை மைய பகுதிகளுடன் அமைக்கும் பணியை தொடங்கினர்.

இதில், கவுன்சில் ஹவுஸ் என்ற பெயருடன் பழைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணி கடந்த 1921ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரிட்டனின் கன்னாட் கோமகன் 1921ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டினார். 1927ல் கட்டி முடிக்கப்பட்ட பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனவரி 18ம் தேதி வைஸ்ராய் இர்வின் பிரபு திறந்து வைத்தார்.
வசீகரமான வட்ட வடிவ கட்டமைப்பு, மேற்கூரையை தாங்கும் 144 ரம்மியமான தூண்கள், இளவரசர்கள் அறை (பின்னாளில் நூலகமாக இருந்தது), 560 விட்டம், ஏறக்குறைய 6 ஏக்கர் பரப்பளவை கொண்ட கட்டிடம்… என அந்நாளில் வேறெந்த நாட்டிலும் இல்லாத கம்பீரமான நாடாளுமன்ற கட்டிடம் அப்போது இந்தியாவிலும், வெளிநாட்டிலும் மிக அதிக அளவில் புகழ்ந்து பேசப்பட்டது.

இதனால் பிரமாண்ட விழா, பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு நீடித்தது. 1927ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் வைஸ்ராய் இர்வின் பங்கேற்றார். இதன் பின் 26 ஆண்டுகள் கழித்து இந்த கட்டிடம் சுதந்திரத்தின் விடியலைக் கண்டது. 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆற்றிய ‘விதியோடு ஓர் ஒப்பந்தம்’ என்ற வரலாற்று சிறப்புமிக்க உரை நாடாளுமன்றத்தில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து இந்த நாடாளுமன்றத்தில் தேசத்தை கட்டமைக்க ஏராளமான சட்டங்கள் எழுதப்பட்டன, காலத்திற்கு ஏற்ப திருத்தப்பட்டன.

தற்போது 96 ஆண்டுகளை பழைய நாடாளுமன்ற கட்டிடம் நிறைவு செய்துள்ள நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 டிசம்பரில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா சர்ச்சையோடு தொடங்கி உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க, நாட்டின் அரசியலமைப்பு தலைவரான ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஏன் அழைக்கவில்லை என காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பெரும் எதிர்ப்புகளுடன் இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. இத்துடன் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் பல அரிய வரலாறுகள் இனி காலப்போக்கில் கடந்து போகும்.

The post வரலாறு பேசும் நாடாளுமன்ற கட்டிடம் அன்றும்… இன்றும்… என்றும்!: 1927ம் ஆண்டு முதல் கடந்து வந்த பாதை appeared first on Dinakaran.

Related Stories: