ஊதிய உயர்வு கேட்டு மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை

மன்னார்குடி, டிச. 3: மன்னார்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாக தொ டர் வேலை நிறுத்தம் எதிரொலியாக நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

154 ஆண்டு கால பாரம்பரியமிக்க மன்னார்குடி நகராட்சியில் 175 தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 100 பேர்கள் தற்காலிக ஊழியர்கள் ஆவார்கள். இந்த தற்காலிக ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.291 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதை உயர்த்தி வழங்க வேண்டும் என இந்த ஊழியர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு ரூ.385 ஆக ஊதியத்தை உயர்த்தி அப்போதைய கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதுவரை உயர்த்தப்பட்ட ஊதியம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு 1 மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தும் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சீருடை கூட வழங்கப்படவில்லை.மேலும், காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலனில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் என்எம்ஆர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் இணைந்து கடந்த 29 ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி 5 ம் நாளான நேற்று ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் என்எம்ஆர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் இணைந்து சிஐடியூ மாவட்ட துணை த் தலைவர் ரகுபதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் என்எம்ஆர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன், சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, சங்க மாநிலக்குழு உறுப்பினர் லோக நாயகி, ஒன்றிய செயளாலர் தனுஸ்கோடி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பிச்சைக்கண்ணு, சிஐடியூஆட்டோ சங்கம் அரிகரன் ஆகியோர் பேசினர். 5 நாட்களாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மன்னார்குடியில் குப்பை அள்ளுதல் உள்ளிட்ட சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: