வேளாண் அலுவலர்கள் விவசாயிகளை சந்திக்கும் பயணத்திட்டம்

சிவகங்கை, டிச.3: உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் மூலம் வேளாண் அலுவலர்கள் ஊராட்சிகளுக்கு சென்று விவசாயிகளை சந்திக்க உள்ளனர். சிவகங்கை வேளா ண்மை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறிப்பிட்ட நாட்களில் ஊராட்சி வாரியாக விவசாயிகளை சந்தித்து நவீன வேளாண் பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயிகள் நலன் காக்கும் மானியத் திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கிட உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி வேளா ண்மை உதவி இயக்குநர் உட்பட்ட வேளாண் அலுவலக அனைத்து நிலை அலுவலர்கள் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளை சந்திக்கும் பயணத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. களப்பணியாளர்களின் கிராம ஊராட்சிகளுக்கு வரும் விபர அட்டவணை மற்றும் விவசாயிகளை சந்திக்கும் இடம் போன்ற விபரங்கள் முன்பே தெரிவிக்கப்படும்.

குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொறு கிராம ஊராட்சிகளிலிருந்தும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் உரிய கால இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்படும்.அலுவலர்கள் கிராம ஊராட்சிகளுக்கு செல்வதும், முன்னோடி விவசாயிகளுக்கு வேளாண் தகவல்கள் பரிமாறப்படுவதும், நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தங்கள் ஊராட்சிக்கு வருகை தரும் களப்பணியாளர்கள் மூலம் தொழில்நுட்ப செய்திகள் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: