திண்டுக்கல், பழநியில் 2வது நாளாக டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் போலீசார் காயம்: தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

பழநி/திண்டுக்கல், டிச. 2: திண்டுக்கல், பழநியில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, பழநியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பழநி-புதுதாராபுரம் சாலையில் நேற்று நடந்த போராட்டத்தில், தலைமை தபால் நிலைய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டனர். இவர்களை தடுக்க போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் உள்ளிட்ட போலீசாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கமலக்கண்ணன், அருள்செல்வன், குருசாமி உட்பட 70க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: