கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுகலை வகுப்புகள் இன்று துவக்கம்

கோவை, டிச. 2: கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று துவங்குகிறது.  தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது, கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து, ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து ஆராய்ச்சி மற்றும் முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான கல்லூரிகள் திறக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து கோவை அரசு கலைக்கல்லூரி வளாகம், வகுப்பறைகள், ஆய்வகங்கள் ஆகியவை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணியாத மாணவர்களுக்கு அனுமதியில்லை எனவும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து கண்காணிக்க தனி கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் கல்லூரியின் முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார். மேலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று துவங்கவில்லை. மாறாக ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் இன்று முதல் வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான விடுதி வரும் 5-ம் தேதி முதல் செயல்படும் என பல்கலைக்கழகத்தினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: