குடியாத்தம் அருகே சோகம் ஜாமீனில் வந்த தொழிலாளி தற்கொலை திருமணமான 9 மாதத்தில் மனைவி கொலை

குடியாத்தம் டிச. 2: குடியாத்தம் அருகே திருமணமான 9 மாதத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த அவரது கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ்(22), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி(19). இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணமானது. திருமணமான சில நாட்களில் இருந்தே தம்பதி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்புலட்சுமி, யுவராஜை செருப்பால் அடித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், அருகே இருந்த இரும்பு பைப்பால் சுப்புலட்சுமியை தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து யுவராஜை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, யுவராஜ் கடந்த மாதம் 24ம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதன்படி கடந்த 5 நாட்களாக யுவராஜ் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். மேலும் மனைவியை கொலை செய்து விட்டோமே என மனஉளைச்சலில் இருந்து வந்தாராம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு வீடு திரும்பிய யுவராஜ், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து யுவராஜின் தந்தை சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: