வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி குறித்து ஆய்வுக்கூட்டம்

திருப்பூர், நவ. 30: வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூரில் நடந்தது. வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, இயக்குநரும், திருப்பூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்பார்வையாளருமான கருணாகரன் தலைமை வகித்து பேசியதாவது: கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி(தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம்(தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 11 லட்சத்து 42,775  ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 60,809  பெண் வாக்காளர்கள் மற்றும் மாற்று பாலினத்தவர் 258 என மொத்தம் 23 லட்சத்து 3842 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 16ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் பெயர் திருத்தம் தொடர்பான சுமார் 42834 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

 சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட 42834 படிவங்களை முறையாக கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை வலியுறுத்தி உடனடியாக முகவர்களின் பெயர் பட்டியலை பெற்று கொண்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, தாராபுரம் சார் கலெக்டர் பவன்குமார், வருவாய் கோட்டாட்சியர் ஜெகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: