நீர்நிலைகளை சீரமைத்து மழைநீரை முழுமையாக தேக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

காரைக்குடி, நவ.27: மழைக்காலத்தில் பெறக்கூடிய தண்ணீரை முழுமையாக தேக்கி விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் மதுசூதனன்ரெட்டி உத்தரவிட்டார்.காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஊரக வாளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பாசனக் கண்மாய் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் மதுசூதனன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், ஒவ்வொரு பகுதிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாசனக்கண்மாய்களை ஆய்வு செய்து சரியாக உள்ளதா என உறுதி செய்திருக்க வேண்டும். மழைக்காலம் துவங்கிய பின் கரை பலப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

மழைக்காலத்தில் பெறக்கூடிய தண்ணீரை முழுமையாக தேக்கி விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மழைநீர் முழுவதும் கண்மாய்க்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், பி.ஆர்.ஓ பாண்டி, ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் முருகன், சருகனியாறு வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர்கள் கண்ணன், முத்துராமலிங்கம், வட்டாட்சியர் ஜெயநிர்மலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: