பரமக்குடி, நவ.27: பரமக்குடி வட்டார வேளாண்மை துறை சார்பாக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டம் வேளாண்மை துறை சார்பாக, திருத்தி அமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ராபி பருவம் 2020-21 திட்டத்தின் மூலம் செயல்படுத்த, வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆணை வழங்கியுள்ளது. இந்த பயிர்காப்பீடு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமத்தில் 75 சதவீதத்துக்கு மேல் பயிர் விதைக்க இயலாமலும், நடவு பொய்த்தாலோ, முளைக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டாலோ, மாவட்ட அளவிலான பயிர்காப்பீடு கண்காணிப்பு குழு மூலமாக பரிந்துரை வழங்கப்பட்டு, பின்னர், பயிர் காப்பீட்டுத் தொகையின் மொத்த மதிப்பீட்டில் 25 சதவீதம் இழப்பீடு வழங்கப்படுகிறது. தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில், வறட்சி, வெள்ளம், தொடர் மழை, தொடர் வறண்ட தினங்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்புக்கு, அறிவிக்க செய்யப்பட்ட வருவாய் கிராமத்தில் உத்தரவாக மகசூல் அடிப்படையில் உரிய காப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் பீரீமியத் தொகையாக நெல் சம்பா பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.252.06 செலுத்தி காப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.