சபரிமலைக்கு செல்ல கொரோனா பரிசோதனை செய்யும் ஐயப்ப பக்தர்கள்

நாமக்கல், நவ.27: கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பனை தரிசிக்க, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டு தலங்கள், கடந்த சில மாதங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்தது. மேலும், ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. படிப்படியாக மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வு காரணமாக, தற்போது ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு மக்கள் சென்று வருகிறார்கள். தமிழகத்தில் கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, சபரிமலைக்கு செல்வது வழக்கம். கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில், சபரிமலை தேவஸ்தான போர்டு, தினமும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் சுவாமியை தரிசிக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள், கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ளவேண்டும் என, தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து தரிசனத்துக்கு செல்ல பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

அவ்வாறு செல்லும் ஐயப்ப பக்தர்கள், நேற்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வரும் ரிசல்ட்டை, சபரிமலை செல்லும்போது கொண்டு செல்லவேண்டும் என்பதால், பரிசோதனை முடிவை பெற தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.

Related Stories: