புயலில் இருந்து பாதுகாக்க தென்னை மரங்களுக்கு காப்பீடு வேளாண்துறை அறிவுறுத்தல்

சிவகங்கை, நவ.24:  தென்னை மரங்களை பாதுகாப்பது மற்றும் காப்பீடு செய்வது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: அதி தீவிரமான வேகத்துடன் வீசும் புயற்காற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும். நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில், முதிர்ச்சி அடைந்த அல்லது முதிர்ச்சி அடையும் தருவாயில் உள்ள இளநீர்க் காய்களை பலத்த காற்று வீசத் தொடங்குவதற்குள் அறுவடை செய்ய வேண்டும். தென்னை மரங்களில் தலைப்பகுதியின் அடிப்பாகத்தில் அதிக எடையுடன் காணப்படும் தென்னை ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். வாய்ப்பு உள்ள இடங்களில், தென்னை மரங்களின் அடிப்பகுதியில் மண்ணால் உயரமாக அணைக்க வேண்டும். உடனடியாக, தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதையும், உரமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

இதையும் மீறி, தென்னை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், விவசாயிகள் தங்கள் தென்னை மரங்களை காப்பீடு செய்து கொள்ளலாம். குட்டை மற்றும் ஒட்டு ரக தென்னை மரங்களை 4ம் ஆண்டு முதலும், நெட்டை மரங்களை 7ம் ஆண்டு முதல் 60ம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்யலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம். ஒரு எக்டேருக்கு சுமார் 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4அல்லது 7வயது முதல் 15வயது உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25ம், 16வயது முதல் 60வயது உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50ம் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும். எனவே தென்னை விவசாயிகள் உடனடியாக தென்னை மரங்களை பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றனர். கூடுதல் தகவல் அறிய வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: