தேவகோட்டை நகராட்சி குப்பை கொட்டுவதால் கால்வாய் அடைப்பு கண்மாய்க்கு தண்ணீர் செல்வதில் சிக்கல்

காரைக்குடி, நவ.23:  காரைக்குடி அருகே ரஸ்தா பகுதியில் வரத்து கால்வாயை அடைத்து தேவகோட்டை நகராட்சி குப்பை கொட்டுவதால், அமராவதி கண்மாய்க்கு தண்ணீர் செல்வது தடைபடுவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ரஸ்தா பகுதியில் உள்ள அரசு இடத்தில் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பை கிடங்கு அருகே காதி நகர், வசந்தம் நகர், பழைய செஞ்சை, நாகவயல் ரோடு, பழைய சங்கராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தவிர அமராவதி கண்மாய்க்கு தண்ணீர் செல்லக் கூடிய வரத்து கால்வாய் இக்குப்பை கிடங்கு அருகே உள்ளது.

இதனை அடைத்து குப்பை கொட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் கண்மாய்க்கு வரும் மழைநீர் தடைபட்டு விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் தேவகோட்டை நகராட்சி சார்பில் குப்பை கொட்டப்படுகிறது. ஆரம்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அதனையும் மீறி கொட்டி வருகின்றனர். இதற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு கொடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.

மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகள் எதையும் தேவகோட்டை நகராட்சி கண்டு கொள்வது இல்லை. இங்கு குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. தவிர அமராவதி கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயை அடைத்து குப்பை கொட்டுகின்றனர். இக்கண்மாய் நிறைந்து அப்பகுதியில் உள்ள 9 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருவ மழை துவங்கி உள்ள நிலையில் பிரதான கால்வாயே அடைக்கப்படுவதால் தண்ணீர் முற்றிலும் தடைபட்டு விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது என்றனர்.

Related Stories: