அதிக பாரத்துடன் விதிமீறி செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்க்கும் போலீசார்

தொண்டி, நவ.23: தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறை மீறி அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றியும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றியும் அதிவேகத்தில் செல்வதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை போக்குவரத்து போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வாகனங்கள் உள்ளது. மணல் லாரிகள் வைக்கோல் ஏற்றி செல்லும் லாரிகள் என எப்போதும் இச்சாலை பரபரப்பாக காணப்படுகிறது.

ஆனால் இவற்றில் எந்த வாகனமும் முறையாக வாகன விதிகளை பின்பற்றி செல்கிறதா என்றால் இல்லை என்றே தெரிகிறது. செங்கல் ஏற்றி செல்லும் லாரிகள் தார்பாய் மூடாமல் செல்கின்றனர். இதனால் பின்னால் டூவீலரில் வருவோர் கண்களை மணல் பதம் பார்த்து விடுகிறது. இதேபோல் வைக்கோல் லாரிகள் எதிரே வரும் வாகனத்திற்கு வழியே இல்லாமல் எவ்வளவு ஏற்ற முடியுமோ அதற்கு மேலும் ஏற்றி திணற செய்கின்றனர். சில நேரங்களில் இதனால் மின் கம்பிகளில் உரசி தீபிடிப்பதும் உண்டு. இதை போக்குவரத்து போலீசார் கண்டும் காணாதது போல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

டூவீலரில் செல்வோர்கள் முதல் பெரிய வாகனங்களில் செல்வோர் வரையிலும் வேக கட்டுப்பாடு இல்லாமல் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனாலும் அதிகளவில் விபத்து நடக்கிறது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதாக தெரிகிறது. அதிவேகமாக மது அருந்தி வாகனம் ஓட்டுவோர்களை போலீசார் பிடித்தால் அபராதம் விதிப்பதோடு ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தொண்டி ஜலால் கூறியது, தொண்டி, நம்புதாளை, வட்டாணம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் விதிமுறை மீறி வாகனம் ஓட்டுவதும் மது அருந்தி ஓட்டுவதும் தான் என தெரிகிறது. விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: