பேராவூரணியை குழந்தை திருமணம் இல்லாத ஒன்றியமாக உருவாக்க வேண்டும்

பேராவூரணி, நவ. 20: பேராவூரணியை குழந்தை திருமணம் இல்லாத ஒன்றியமாக உருவாக்க வேண்டுமென குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, சடையப்பன் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட குழந்தைகள் அலகு ஆலோசகர் ஷீபா ஹெலன், வட்டாரக்குழு உறுப்பினர் சுகந்தி ஆகியோர் பங்கேற்று குழந்தைகள் பாதுகாப்பு குழு செயல்பாடு, நோக்கம், பிரச்னைகளை களைதல், வழங்கப்படும் உதவிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு அளிப்பது, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கருவுற்ற நிலையில் மருத்துவமனைக்கு வந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். ஒன்றியத்தில் குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுப்பது, குழந்தை கடத்தல், குழந்தை துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் இல்லாத ஒன்றியமாக உருவாக்குவது, பெற்றோர் இல்லாத, ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் அம்மையாண்டி முத்துராமலிங்கம், பெரியநாயகிபுரம் வத்சலா முத்துராமன் மற்றும் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அலுவலர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார்.

Related Stories: