உரிய நேரத்தில் மழை இல்லாததால் பாதிக்குப்பாதி குறைந்த காப்பி மகசூல் பெரும்பாறை பகுதி விவசாயிகள் கவலை

பட்டிவீரன்பட்டி, நவ. 9: பட்டிவீரன்பட்டி அருகே, பெரும்பாறை மலைப்பகுதியில் உரிய நேரத்தில் மழை இல்லாததால், காப்பி விளைச்சல் பாதிக்குப்பாதியாக குறைந்துள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, பூலத்தூர், கும்பரையூர், மங்களம்கொம்பு, கும்பம்மாள்பட்டி ஆகிய கீழ்பழநிமலைப் பகுதிகளில் காப்பி, மிளகு, மலைவாழை விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் தற்போது காப்பி பழம் பறிக்கும் சீசன் தொடங்கியுள்ளது. ஆனால், போதிய விளைச்சல், விலையில்லாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்தாண்டு உரிய நேரத்தில் பருவமழை இன்மை, பருவநிலை மாற்றம் காரணங்களால் காப்பி விளைச்சல் 50 சதவீதம் குறைந்துள்ளது. தாண்டிக்குடி மலைப்பகுதியில் அரபிக்கா, ரப்போஸ்டா என இருவகை காப்பி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த காப்பி செடிகள் நடப்பட்ட காலத்திலிருந்து 4 ஆண்டில் பலன் தரத்தொடங்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி காப்பி பழம் பறிகும் சீசனாகும். சமீபத்தில் பெரும்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால், காப்பி பழங்கள் திரட்சியாக பெருத்துள்ளது. தற்போது இந்த பழங்கள் செடியிலேயே பழுக்கத் தொடங்கியுள்ளது. செடிகளில் உள்ள காப்பி பழங்களை கூலித்தொழிலாளர்கள் மூலம் பறிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தாண்டு எலுமிச்சை விளைச்சலும் எதிர்பார்த்த அளவு இல்லை. இதேபோல, காப்பி பழங்களுக்கும் விலையில்லாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை:

‘காப்பி பழங்களிலிருந்து எடுக்கப்படும் காபி தளர் கொட்டி கிலோ ரூ.160 முதல் ரூ.175 வரை விற்கப்படுகிறது. காப்பி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்கின்றன. காப்பி பழத்தை செடியிலிருந்து எடுப்பதற்கு கிலோவிற்கு ரூ.90 கூலி கொடுக்கிறோம். தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்வது போல், காப்பிக்கும் அரசு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: