பெரிய கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி அதிகாரிகள்

கோவை, நவ. 6: கோவை பெரிய கடை வீதியில் தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை பயன்படுத்த தடை விதித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினார்கள். கோவையில் உள்ள  பழைய கட்டிடங்களை கண்டறிந்து அவற்றில் பாதுகாப்பு இல்லாமல் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்க மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.  இதனையடுத்து கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பெரிய கடை வீதியில் உள்ள ஒரு பழைய  கட்டிடத்தில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அந்த கட்டிடத்தில் நோட்டீஸ் ஒட்டினார்கள். அதில் இந்த கட்டிடம்  உறுதி தன்மை மிகவும் குறைந்து பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை உபயோகிக்க தடை செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல்  தளங்களில் மொத்தம் 40 கடைகள் உள்ளன. இதில் சுமார் 10 கடைகள் செயல்படுகின்றன. மீதி  கடைகள் மூடப்பட்டுள்ளன. இது பாதுகாப்பு இல்லாத கட்டிடம். ஆகையால் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: