விருதுநகர் ஜிஹெச்சில் மேல்சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு உறவினர்கள் முற்றுகை, மறியலால் பரபரப்பு

விருதுநகர், நவ. 1: விருதுநகர் ஜிஹெச்சில் மேல்சிகிச்சைக்கு வந்த கர்ப்பணி பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த மதுரைபாண்டி மகள் பாண்டி செல்வி (21), கடந்த பிப்ரவரி மாதம் முருகேசனுடன் திருமணம் ஆனது. கர்ப்பிணியான பாண்டிசெல்வி சாத்தூர் ஜிஹெச்சில் கடந்த 3 நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நிலையில் பாண்டி செல்விக்கு தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக விருதுநகர் ஜிஹெச்சிற்கும், குழந்தை பாளையம்கோட்டை ஜிஹெச்சிற்கும் அனுப்பப்பட்டது.

தொடர் ரத்தக்போக்கினால் பாண்டிசெல்வி விருதுநகர் ஜிஹெச்சிற்கு வரும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து முற்றுகை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து உறவினர்கள் சாத்தூர் ஜிஹெச்சில் கர்ப்பிணிகள் பிரசவத்தின் போது இறப்பது அதிகரித்து வருவதாகவும், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது ஆர்டிஓ விசாரணை நடத்த கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  கிழக்கு இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார் பாண்டிசெல்வி பெற்றோர், உறவினர்களை பேசி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Related Stories: