ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு 24 மணி நேரத்தில் மின்இணைப்பு

கோவை, நவ. 1:  தினகரன் செய்தி எதிரொலியாக ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. கோவையை அடுத்த சோமனூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட தெக்கலூர் மேற்கு பிரிவு அலுவலகத்தை சேர்ந்த பகுதியான வடுகபாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ். இவர், கருமத்தம்பட்டியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டாம்பாளையம்  அடுத்த வடுகபாளையத்தில் சுமார் ஐந்து சென்ட் நிலம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், சொந்த வீட்டில் குடியேற வேண்டுமென்ற ஆசையுடன், சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தின் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூரையால் வேயப்பட்ட முற்றிலும் தகர சீட்டுகள் மூலம் சமையலறை உள்பட நான்கு அறைகள் ெகாண்ட  வீடு கட்டினார். கடந்த ஜூன் மாதம் மின் இணைப்புக்காக தெக்கலூர் மேற்கு பிரிவு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இவரது வீட்டை நேரில் ஆய்வு செய்த உதவி மின்பொறியாளர் சின்னச்சாமி மற்றும் வணிக ஆய்வாளர் சங்கீதா ஆகியோர், மின் மீட்டர் பெட்டி பொருத்துவதற்கு ஏற்ப சுவர் அமைத்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, சுவர் கட்டிவிட்டதாகவும் வயரிங் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டதாகவும் செல்வராஜ் கூறினார். ஆனாலும், மின்இணைப்பு வழங்காமல் இழுத்தடித்தனர். தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்தார். இது தொடர்பான செய்தி கடந்த 30ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது.  இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கும்படி கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் உத்தரவிட்டார். இதை ஏற்று, மின்வாரிய அலுவலக போர்மேன் சந்தோஷ் பாபு மற்றும் மின் ஊழியர்கள் நேற்று ஆட்டோ ஓட்டுனர் செல்வராஜ் வீட்டிற்கு சென்று மின் இணைப்பு வழங்கினர். செய்தி வெளியான அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணிகள் ஜரூராக நடந்து முடிந்த காரணத்தால், ஆட்டோ டிரைவர் செல்வராஜ் மகிழ்ச்சி அடைந்தார். இது பற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘’புதிய மின் இணைப்பு கோரும்போது, முறையான ஆவணங்கள் இணைக்கப்பட்டு, சரியான முறையில் விண்ணப்பம் செய்தால், தடையின்றி மின் இணைப்பு வழங்கப்படும்’’ என்றனர்.

Related Stories: