பாதை வசதிக்கேட்டு மயானத்தில் காத்திருப்பு போராட்டம்

காளையார்கோவில், அக்.23: காளையார்கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தமிழ் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இறந்தவர்களை புதைப்பதற்காக அப்பகுதியில் அரசு சார்பில் மயானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மயானத்திற்கு செல்வதற்காக தற்போது அரசு சார்பில் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. மயானத்திற்கு செல்லும் ரோடு, தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ரோட்டின் குறுக்கே ஜேசிபி இயந்திரம் மூலம் யாரும் நடக்க முடியாதவாறு குழிதோண்டி போட்டுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காளையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் மற்றும் கிராம அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கிராம நிர்வாக அலுவலர் கூறும்போது, இந்த மயானம் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. அதற்கான பதிவு பதிவேட்டில் உள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து சர்வேயர் மூலம் அளந்து நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் செந்தமிழ் நகர் கிழக்கு ஆதிதிராவிடர் சமூக மக்களின் மயானத்தில், ஆக்கிரமிப்புகளை அகற்றி 20 அடி மயான சாலை அமைத்து தர கோரியும், அரசு பதிவேட்டில் ஆதிதிராவிடர் மயான சாலை என பதிவு செய்ய கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் வெற்றி விஜயன் தலைமையில் கிராம மக்கள் மயானத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மீண்டும் ஓரிரு தினங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பெயரில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories: