ஒட்டன்சத்திரத்தில் தொடர் திருட்டால் மக்கள் அச்சம் இரவு ரோந்து பணி தீவிரமாகுமா?

ஒட்டன்சத்திரம், அக். 20: ஒட்டன்சத்திரத்தில் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் ராகுரெட்டியார்பேட்டையை சேர்ந்த முகமது தாகீர் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு கடையை அடைத்து சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்த போது கடையி–்ன் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், பொருட்கள் திருடு போயிருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த முகமது தாகீர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கடையின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் இரவு 12 மணிக்கு டூவீலரில் வந்த 2 பேர் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக கடைகள் உடைக்கப்பட்டு திருடப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரம் திருவள்ளுவர் சாலையில் உள்ள செல்போன் கடையை உடைத்து செல்போன்கள், பொருட்களை திருடி சென்றனர். மேலும் திண்டுக்கல் சாலை, செக்போஸ்டில் உள்ள உள்ள மளிகை கடைகளை உடைத்து அங்கிருந்த பொருட்கள், பணத்தை திருடி சென்றுள்ளனர். தற்போது காவல் நிலையம், டிஎஸ்பி. அலுவலகம், மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள பஸ்நிலையத்திலேயே திருடுபோனதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே நகர் பகுதியில் டூவீலர்கள், ஆடு, மாடுகள் தொடர்ந்து திருடுபோவதாகவும், எனவே காவல்துறையினர் இரவு ரோந்தை அதிகரிக்க வேண்டுமென தினகரன் நாளிதழில் கடந்த செப்.21ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காவல்துறையினர் இரவு ரோந்தை அதிகரித்து குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டுமென பொதுமக்களும், வணிக நிறுவனத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: