தூத்துக்குடியில் தண்டவாள பகுதிகளில் இரும்பு பொருட்களை திருடிய இருவர் கைது மாறு வேடத்தில் மடக்கிய ரயில்வே போலீசார்

தூத்துக்குடி, அக்.18: தூத்துக்குடி ரயில்வே தண்டவாளப்பகுதிகளில் இரும்பு பொருட்களை திருடிய இருவரை ரயில்வே போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்தனர்.  இந்தியாவில் கொரோனா பரவியதைத் தொடர்ந்து மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது. இதனால் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டது. தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சில வழித்தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படையினர் தூத்துக்குடி முதல் வாஞ்சி மணியாச்சி வரையிலான ரயில் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஊரடங்கு காலத்தில் ரயில்கள் இயக்கப்படாததை பயன்படுத்தி தண்டவாளங்களிலுள்ள இரும்பு பொருட்கள் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இரும்பு பொருட்களை திருடியவர்களை கைது செய்திட தென்னக ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி., பிரேந்திரகுமார், மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு ஆகியோரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை  சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து எஸ்ஐ சுப்பிரமணியன் தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை குற்ற புலனாய்வு பிரிவு எஸ்ஐ பாலச்சந்திரன், தலைமை காவலர்கள் சங்கரபாண்டி, சுரேஷ்குமார், முருகானந்தம், சுரேந்திரன், ஜெயக்குமார், செந்தில்முத்து ஆகியோர் தூத்துக்குடி முதல் வாஞ்சிமணியாச்சி வரையிலான ரயில் வழித்தட பகுதிகளில் மாறுவேடத்தில் சென்று பகல், இரவு நேரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். தொடர் கண்காணிப்பு பணி காரணமாக சம்பவத்தன்று இரவு தட்டப்பாறை பகுதியில் தண்டவாளத்தில் இரும்புபொருட்களை திருடிய மர்மநபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் மகன் இசக்கிவேல்(45) என்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், திருட்டு பொருட்களை வாங்கிய மகிழ்ச்சிபுரம் திருவடி மகனான இரும்புக்கடை உரிமையாளர் ஐயப்பனையும்(43) ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து திருட்டுபோன ரூ.50ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் மீட்கப்பட்டதுடன், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது

Related Stories: