சாலையோர குப்பைகளுக்கு தீ புகை மண்டலத்தால் விபத்து அச்சம்

திருவில்லிபுத்தூர், அக்.18:  திருவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் குப்பைகளுக்கு தீ வைப்பதால், விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நொடிக்கு நொடி மின்னல் வேகத்தில் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. பைக்கில் முதல் பெரிய அளவிலான கனரக வாகனங்கள் வரை பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக மதுரையிலிருந்து இருந்து தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு ஊர்களுக்கும் அதிகளவு இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் பயணம் செய்கிறார்கள்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையோர பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளில் மர்ம ஆசாமிகள் சிலர் தீ வைத்து விடுகின்றனர். காற்றின் வேகத்திற்கு ஏற்ப தீயிலிருந்து ஏற்படும் புகை அப்பகுதி முழுவதுமே பரவி நெடுஞ்சாலையில் செல்வோரது முழுவதுமே தெரியாத அளவிற்கு ஒரே புகை மண்டலமாக மாறி விடுகிறது. வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக இந்திரா நகர் பகுதியில் இருந்து கிருஷ்ணன் கோயில் வரை உள்ள சாலை ஓரங்களில் இவ்வாறு குப்பையில் தீ வைக்கப்படுகிறது. இந்த புகை நெடுஞ்சாலை முழுவதும் புகை மண்டலமாக இருப்பதால், எதிரே எந்த வாகனம் வரும் என்பது தெரிவதில்லை. வாகனங்களில் வருபவர்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே சாலை ஓரங்களில் குப்பைகளில் தீ வைப்பவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: