வேட்டை பொருட்களுடன் வள்ளி கோயிலில் படையலிட்டு பழங்குடி மக்கள் வழிபாடு

மதுரை, அக்.18:  மதுரையில் பழங்குடி மக்கள் தங்களின் வேட்டை பொருட்களுடன் பாரம்பரிய முறைப்படி படையல் இட்டு வள்ளியை வழிபட்டனர். பல்வேறு ஆலயங்களிலும் தமிழ் கடவுளாம் முருகப் பெருமான், தனது மனைவிகள் வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலிக்கிறார். பழங்குடி குறவர் பிரிவைச் சேர்ந்த வள்ளியை முருகன் காதலித்து  திருமணம் செய்தார். வள்ளியின் வழித்தோன்றல்களாக பழங்குடி மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். குறவர் பழங்குடியினர் (நரிக்குறவர் அல்ல) வள்ளிக்கு பல்வேறு இடங்களில் கோயில் கட்டி குலதெய்வமாக வழிபடுகின்றனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வள்ளியின் வழி தோன்றல்களான பழங்குடி மக்கள் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தங்களின் குலதெய்வமான வள்ளி பெயரில் கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3 நாள் திருவிழா நடக்கும்.

இத்திருவிழாவின் போது குறிஞ்சி நிலத்தை சேர்ந்த இந்த பழங்குடி மக்கள், காட்டுப்பகுதிக்கு சென்று வேட்டையாடி, கிடைக்கும் பன்றி, புறா, காடை, முயல், தேன் மற்றும் தினை மாவு, பலாப்பழம் போன்றவற்றை படைத்து வழிபடுவது வழக்கம். வனப்பகுதிக்கு சென்று வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லாத நிலையில், கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான திருவிழா சில வாரங்கள் தள்ளி வைக்கப்பட்டன. தங்களின் பாரம்பரிய பழக்க வழக்கத்தை பின்பற்றிடும் வகையில் விநாயகர் கோயிலிலிருந்து பெண்கள் வேட்டை பொருட்களுடன் ஊர்வலமாக, மேளதாளங்கள் முழங்க பெண்கள் சுமந்து வந்தனர். சிறுவர்கள் வேடன் வேடமணிந்து வில் மற்றும் அம்புடன் கூத்தாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். வள்ளி கோயில் முன்பு வாழை இலை விரித்து வேட்டை பொருட்களை படையல் வைத்தனர். பின்னர் அனைவரும் தங்கள் குலதெய்வமான வள்ளியை வழிபட்டனர்.

Related Stories: