வெளிமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை தீர்ந்தது

ஈரோடு, செப்.26:வெளிமாநில தொழிலாளர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் வளாகம், ஈரோடு, சென்னிமலை, கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சிறு, குறு மற்றும் பெரும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஜவுளி, பிளாஸ்டிக், ஓட்டல், கட்டுமானம், மசாலா தயாரிப்பு நிறுவனங்களில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்பட்டன. இதையடுத்து, வடமாநில தொழிலாளர்களை அந்தந்த தொழில் நிறுவனங்கள் பாதுகாத்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு பிறகு சொந்த மாநிலங்களுக்கு செல்ல தொடங்கினர்.

 

பின்னர், கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கின. ஆனால், சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாததால் தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி குறைய துவங்கியது. இதையடுத்து, அரசின் அனுமதி பெற்று வெளிமாநில தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகங்கள் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்தன. இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஈரோடு கிளை முன்னாள் தலைவர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:கோவிட்-19 பரவல் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து தொழிலாளர்களை அந்தந்த தொழிற்சாலைகள் தங்களது சொந்த பொறுப்பில் வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலம் அழைத்து வந்து குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து தற்போது அனைத்து தொழிற்சாலைகளிலும் ஏறக்குறைய வெளிமாநிதொழிலாளர்கள் பணிக்கு திரும்பி உள்ளதால் உற்பத்தி மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளது. ஒரு சில தொழிற்சாலைகளில் ஆர்டர்கள் இல்லாததால் உற்பத்தி குறைந்திருக்கலாம். மற்றபடி தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிப்பு என்ற நிலை ஈரோடு மாவட்டத்தில் இல்லை. அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி தொழிலாளர்கள் தினமும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories:

>