போலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை

கோவை, மார்ச் 20: கோவை மாநகரில் போலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகரில் சமீபத்தில் இரு தரப்பினர் இடையே நிகழ்ந்த மோதல் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை போக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். கோவை மாநகருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து சோதனைச்சாவடிகளில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, கோவை சாயிபாபா காலனி மற்றும் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் மர்ம பார்சலை ரகசியமாக வைத்து, போலீசாரின் செயல்பாடுகளை உயரதிகாரிகள் கண்காணித்தனர். சம்பவ இடத்துக்கு அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் எவ்வளவு வேகமாக செல்கிறார்கள்? வெடிகுண்டு நிபுணர்கள் எவ்வளவு நேரத்தில் செல்கிறார்கள்? போலீசாரின் பணி எந்த அளவுக்கு வேகமாக உள்ளது? காவல் நிலையத்துக்கு டெலிபோன் அழைப்பு வந்தால், அதை உதாசீனம் செய்யாமல், உடனடியாக ஸ்பார்ட்டுக்கு செல்கிறார்களா? என ஆய்வு செய்தனர். இந்த நூதன டெஸ்டில் சாயிபாபா காலனி மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீசார் பாஸ் மார்க் வாங்கிவிட்டதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: