கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி முக கவசம், கிருமிநாசினிக்கு தட்டுப்பாடு

திருப்பூர்,மார்ச் 20: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியால் திருப்பூர் மாவட்டத்தில் முக கவசம், கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றை வாங்க மருந்து கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருப்பூர் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிந்தபடி சென்றனர். மாநகரில் பஸ் நிலையங்கள், கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள மருந்துக்கடைகளில் முக கவசம், கிருமி நாசினி வாங்குவதற்கு மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. காலை முதல் அதிகம் பேர் வந்து மொத்தமாக முக கவசம், கிருமி நாசினியை வாங்கிக்சென்றனர். இதன் காரணமாக முக கவசமும் மருந்து கடைகளில் விற்று தீர்ந்து விட்டதால் அதற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதுபோல் மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி, முக கவசத்துக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.கிருமி நாசினி, முக கவசத்தின் தேவை அதிகரித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் அவற்றை தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: