அரசு, தனியார் அலுவலகங்களில் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப் வைக்க வலியுறுத்தல்

ஈரோடு, மார்ச் 20:  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஈரோட்டில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மக்கள் கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப், ஹைண்ட் சென்டைசர் போன்றவற்றை வளாகங்களில் வைக்க வேண்டும். மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பினை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் ஸ்டாண்ட், வணிக நிறுவனங்கள், மக்கள் கூடும் பகுதிகளிலும் சுகாதார பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  ஈரோடு மாநகராட்சி 4 மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு நுழைவுவாயிலில் அவர்களது கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப், ஹேண்ட் சென்டைசர் போன்ற உபகரணங்களை வைக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக அரசு துறை அலுவலகங்கள், திருமண மண்டபம், தியேட்டர், மருத்துவமனை, வணிக நிறுவனங்களில் லைசால் அல்லது சோடியம் ஹைப்போகுளோரைட் மூலம் தரைப்பகுதிகளையும், நாற்காலிகள், கதவு கைப்பிடிகள், ஜன்னல்கள், மாடிப்படிகளின் கைப்பிடிகள் ஆகிய இடங்களில் தினமும் 3 முறை சுத்தப்படுத்த வேண்டும். பொதுமக்கள், வாடிக்கையாளர் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாகவும், நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் பொருட்டும் ஹேண்ட் செனிடைசர் அல்லது சோப், தண்ணீர் போன்றவை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். சுற்றுப்புறங்களை பிளீச்சிங் பவுடர்களால் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.  கழிவறைகளில் கழிவுகள் தேங்காமல் பராமரித்து கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். இதை செய்ய தவறும் பட்சத்தில் பொதுசுகாதார சட்டம் 1939ன் படி 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>