குண்டம் திருவிழா ஒத்தி வைத்ததால் பண்ணாரி அம்மன் கோயில் பந்தல் அகற்றம்

சத்தியமங்கலம், மார்ச் 20: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதால் விழா பந்தல் நேற்று அகற்றப்பட்டது. சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதன்படி, இந்தாண்டு திருவிழா மார்ச் 23ம் தேதி துவங்கி ஏப்.13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குண்டம் திருவிழா மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக ஈரோடு கலெக்டர் கதிரவன் அறிவித்தார்.இதைத்தொடர்ந்து, கோயில் திருவிழாவிற்காக பல ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டதால் பந்தல் பணிகள் நிறுத்தப்பட்டு பொருட்கள் கழற்றி எடுத்துச் செல்லப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: