முகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்

வேலூர், மார்ச் 20: வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ள நிலையில், இன்று முதல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் முகக்கவசத்தை அணிந்தபடி வெளியே செல்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், முகக்கவசங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. மருந்து கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மகளிர் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு தேவையான முகக்கவசம் தயாரிக்கும் பணி வேலூர் மகளிர் திட்ட அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் அண்ணா சாலை மாவட்ட ஊராட்சி வளாகம் பூமாலை அலுவலகத்தின் அருகே வெல்மா ஆயத்த ஆடை மையத்தில் முகக்கவசம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பணியாற்றும் பெண்கள் இரவு பகலாக முகக்கவசம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு வீச்சில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் முகக்கவசங்களுக்கு அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவி வருவதால், முகக்கவசம் தேவை அதிகரித்துள்ளது. சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் மகளிர் திட்டம் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணி வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியை வெல்மா மகளிர் சுய உதவிக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் முகக்கவசம் பூமாலை வணிக வளாகத்திலேயே இன்று முதல் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. ஒரு முகக்கவசம் ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம். வெளிமார்க்கெட்டை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் அனைத்து பகுதிகளில் உள்ள வெல்மா அங்காடியில் விற்பனை செய்யப்பட உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த சானிடரி நாப்கின் விற்பனைக்கு வர உள்ளது. இதன் மூலம் வெளிமார்க்கெட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது.

Related Stories:

>