துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை

வேலூர், மார்ச் 20: வேலூர் மேல்மொணவூர் தேசிய ெநடுஞ்சாலை சர்வீஸ் சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. வேலூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மழைநீர்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர் கால்வாய் பல இடங்களில் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் மீது குப்பைகளை கொட்டி வருகின்றனர். குறிப்பாக இறைச்சி கழிவுகளை கொட்டி தீயிட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் அடுத்த மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகளை சமூக விரோதிகள் கொட்டி வருகின்றனர்.  இதுகுறித்து அந்த பகுதிமக்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து தனிநபர்கள் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைநீர் கால்வாய் செல்லும் வழியில் குப்பைகளை உள்ளே கொட்டி விடுகின்றனர். இதனால் மழைநீர் கால்வாய் வழியாக செல்ல வேண்டிய நீர் அனைத்தும் சர்வீஸ் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது. கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிலாப் உடைந்துள்ளது. திறந்தவெளி குப்பை கிடங்காக மாறி உள்ளது. எனவே இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.வேலூர் மேல்மொணவூர் பகுதியில் மழைநீர்கால்வாய் மீது கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகள்.

Related Stories:

>