புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு ஏரிக்கு கொண்டு வர வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் 4 கிராம மக்கள் கோரிக்கை ஏரித்திருவிழா நாளன்று பொற்கொடியம்மன்

அணைக்கட்டு, மே 1: ஏரித்திருவிழா நடைபெறும் நாளன்று ெபாற்கொடியம்மன் புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் 4 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேலங்காடு பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரி திருவிழா இந்த ஆண்டு வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலைய துறையினர், வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய 4 கிராம மேட்டுக்குடிகள், பொதுமக்களுடனான ஆலோசனை கூட்டம் வல்லண்டராமம் கிராம பொற்கொடியம்மன் ஊர் கோயில் மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். டிஎஸ்பி திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை வரவேற்றார். கூட்டத்தில் மருத்துவத் துறை, மின்வாரியத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில் ஏரித் திருவிழா நடக்கும் நாள் அன்று மாவட்ட நிர்வாகம் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கோயில் நிர்வாகத்தினர் தேர் கூடவே வரவேண்டும். தேர் செல்லும்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும். பல ஊர்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் புஷ்ப ரத தேரை பார்க்க முடியாமல் திரும்புகின்றனர். எனவே இந்த முறை சரியாக காலை 10 மணிக்கே புஷ்பரத தேரை வேலங்காடு ஏரிக்கு கொண்டு வர வேண்டும். தேர் மீது அறநிலைத்துறை சார்பில் மட்டுமே காணிக்கை உண்டியலை வைக்க வேண்டும். திருவிழாவின் போது ஏரியில் தண்ணீர் அதிக அளவில் வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அதற்கு தாசில்தார் மற்றும் டிஎஸ்பி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர். மேலும் தேர் ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கும் ஏரிக்கும் வருவதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த விழா குழுவினரும் இளைஞர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் ஏரி திருவிழாவிற்கான ஏற்பாடுகளும் வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம், ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி, கோயில் எழுத்தர்கள் ஆறுமுகம், ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post புஷ்பரத தேரை காலை 10 மணிக்கே வேலங்காடு ஏரிக்கு கொண்டு வர வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் 4 கிராம மக்கள் கோரிக்கை ஏரித்திருவிழா நாளன்று பொற்கொடியம்மன் appeared first on Dinakaran.

Related Stories: