குடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை

குடியாத்தம், மார்ச் 19: குடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் செய்த 14 யானைகள் கூட்டத்தை வனத்துறையினர் ஆந்திராவுக்கு விரட்டியடித்தனர். குடியாத்தம் வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக 14 காட்டு யானைகள் முகாமிட்டு தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. இவை அவ்வப்போது தனகொண்டபள்ளி, கொட்டமிட்டா, மோர்தானா, ஜிட்டப்பள்ளி, பரதராமி, காட்பாடி ஆகிய பகுதிகளுக்கு சென்று விளைநிலங்களில் உள்ள விவசாய பயிர்கள், வாழை, மா, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தனகொண்டபள்ளி வயல் வெளியில் அந்த யானைகள் நுழைய முயன்றது. இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து திரண்டனர். கிராம மக்களுடன் இணைந்து வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும், மிளகாய் பொடியை தூவியும் விரட்டினர். இதையடுத்து அவை சுமார் 10 கிலோ மீட்டர் கடந்து ஆந்திர வனப்பகுதிக்கு சென்றது. ஆனால், எவ்வளவு தூரம் விரட்டியடித்தாலும் யானைகள் மீண்டும் மீண்டும் திரும்பி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories:

>