31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சத்துணவு மையங்களில் தேங்கிய முட்டைகளை மாணவர்களிடம் வழங்க வேண்டும்

வேலூர், மார்ச் 19: பள்ளிகள், சத்துணவு மையங்களுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதால் அந்த நாட்களில் வழங்கப்பட வேண்டிய முட்டைகளை நேரில் மாணவ, மாணவிகளையோ, பெற்றோரையோ நேரில் வரவழைத்து வழங்க வேண்டும் என்று சமூக நல ஆணையர் சத்துணவு அமைப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள்(சத்துணவு திட்டம்), மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் கொரோனா அச்சம் காரணமாக வரும் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு மார்ச் மாதம் 3வது மாதத்துக்கான முட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இவை சத்துணவு மையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தேங்கியுள்ளன.

எனவே, சத்துணவு மையங்களில் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 16, 17, 18, 19 மற்றும் 20 ஆகிய 5 நாட்களுக்கு ஐந்து முட்டைகள் வீதம் வழங்கப்பட வேண்டும். அல்லது அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து அவர்களின் செல்போன் எண்ணுடன் ஒப்பம் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது சத்துணவு பணியாளர்கள் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஐந்து முட்டைகளை வழங்கி ஒப்புதல் கையொப்பம் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். முட்டைகள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட சத்துணவு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>