ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வலியுறுத்தல்

ஈரோடு, மார்ச் 19: ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கடந்த 1984ம்ஆண்டு ஈரோடு அருகே சித்தோட்டில் போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் பொறியியல் படிப்பிற்காக ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியை உருவாக்கினார். இந்த கல்லூரி போக்குவரத்து துறையால் செயல்பட்டு வருகிறது. தற்போது, பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரியை அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.

அதேபோல், இந்த பொறியியல் கல்லூரியையும் அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும். அப்படி செய்தால் 10 மாவட்ட மாணவ, மாணவியர் உயர்கல்வியை படிக்க உதவியாக இருக்கும். தற்போது, இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் 420  மாணவர்களை சேர்ப்பதற்கு வாய்ப்பு  இருக்கிறது. இதில், குறிப்பிட்ட சதவீதத்தை போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு மீதியை மற்ற மாணவ, மாணவியருக்கு கொடுக்க ஆவணம் செய்ய வேண்டும். பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை போன்றே இந்த பொறியியல் கல்லூரிக்கும் அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Related Stories:

>