கம்பம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக தனிவார்டு தயார் நிலையில் உள்ளது

கம்பம், மார்ச் 18: கம்பம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் வருபவர்களுக்கு, சிகிச்சை அளிக்க தனிவார்டு தயார்நிலையில் உள்ளது. கம்பம் அருகே உள்ள கூடலூரில், கடந்த சனிக்கிழமை இரவு பெண்மணி ஒருவர் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், கம்பம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து கம்பம் அரசு மருத்துவமனையில் சோதித்த அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி, ரத்த மாதிரி பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனா பீதி கிளம்பியது. ஆனால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த சோதனையில், கூடலூர் பெண்ணுக்கு கொரொனா தாக்குதல் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள், மக்கள் அதிகமாகக் கூடும் தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களை மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தோட்ட தொழிலாளிகள் வேலைக்கு கேரளா செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர். கம்பத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநிலம் நெடுங்கண்டத்தில் 19 பேருக்கு கொரோனா நோய் அறிகுறி தென்படுவதாக, தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், இடுக்கி மாவட்டத்தில் கொரொனா நோய் தொற்று கண்டறியப்பட்டு 55 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கம்பமெட்டு, லோயர்கேம்ப் போன்ற கேரள மாநில எல்லைகளில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கம்பம் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 3 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் நிலையில் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: