ஆந்திர கொள்ளையர்கள் இருவர் சிக்கினர்: 11 செல்போன்கள் பறிமுதல்

பல்லாவரம், மார்ச் 18: தாம்பரம் பஸ் நிலையத்தில், பஸ்சி ஏறும் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி, செய்தித்தாள் வைத்து மறைத்து, நூதன திருட்டில் ஈடுபடுவதாக தாம்பரம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், மீண்டும் பயணிகளின் செல்போன் திருடு போனதாக நேற்று தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த வெங்கடேஷ் (20), தரண்குமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் இருந்த 2 பேர் தப்பிவிட்டனர்.

பிடிப்பட்ட 2 பேரிடம் இருந்து, 11 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், நூதன முறையில் செல்போன் திருடுவதற்கு, மேற்கு கோதாவரி, ஹாக்கிவீடு என்ற பகுதியில் பயிற்சி அளித்து, வார இறுதி நாளில் விஜயவாடா சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, மறுநாள் காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி பஸ் மற்றும் ரயிலில் கைவரிசையை காட்டி வந்துள்ளனர் என தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2016ம் ஆண்டு முதல் தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட கும்பல், முதல் முறையாக சென்னையில் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: