புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5 கோடி மதிப்பில் 3டி அனிமேஷன் திட்டம்: சுற்றுலா ஆணையர் நேரில் ஆய்வு

மாமல்லபுரம், ஏப்.25: மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், 3டி அனிமேஷன் திட்டத்துக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மேப்பிங் திட்டம் அமைய உள்ள இடத்தினை சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உலக புகழ் பெற்ற மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும், இங்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 3டி அனிமேஷன் திட்டம் செயல்படுத்த ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை, செயல்படுத்த கடந்தாண்டு வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை தனியார் நிறுவன ஊழியர்கள் தொல்லியல் துறையிடம் அனுமதி கடிதம் பெற்று, 360 டிகிரி சுழலும் கேமராவில் 3டி வீடியோ பதிவு செய்தனர். 3டி அனிமேஷன் திட்டத்திற்காக தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின்சார அறை, நுழைவு கட்டண அறை, வரவேற்பு அரங்கம் மற்றும் புல்வெளி தரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 3டி அனிமேஷன் திட்டத்துக்கு 9100 சதுர அடி தேவைப்படுகிறது. இங்கு, சினிமா தியேட்டரில் பார்ப்பது போன்று, அர்ஜூனன் தபசு மீது புராதன சின்னங்கள் குறித்து லேசர் மூலம் 3டி வீடியோ 30 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு, புராதன சின்னங்கள் எந்த காலத்தில், எந்த மன்னரால் உருவாக்கப்பட்டது என்பது குறித்து பயணிகளுக்கு தெளிவாக விளக்கி கூற திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 3டி அனிமேஷன் மேப்பிங் திட்டம் அமைய உள்ள இடத்தினை சுற்றுலாத் துறை ஆணையர் சமயமூர்த்தி நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல், கடற்கரை கோயில் செல்லும் வழியில் உள்ள பழைய தமிழ்நாடு சுற்றுலா கழக விடுதி, கடற்கரையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதிக்கு சொந்தமான இடத்தை சுற்றி மதில் சுவர் கட்டியது, ₹10 கோடி மதிப்பில் மரகத பூங்கா மேம்பாட்டு பணி உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சுற்றுலா வழிகாட்டிகளிடம் முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதா என கேட்டறிந்து, உங்களுக்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில் எத்தனை பேர் உள்ளீர்கள் என பதிவு செய்ய வேண்டும். மேலும், மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில், சுற்றுலா வழிகாட்டிகள் ஒரே மாதிரியான சீருடை அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். விரைவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கிகரீக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி சுற்றுலா வழிகாட்டிகளிடம் தெரிவித்து புறப்பட்டு சென்றார்.

The post புராதன சின்னங்களை விளக்கும் வகையில் ₹5 கோடி மதிப்பில் 3டி அனிமேஷன் திட்டம்: சுற்றுலா ஆணையர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: