திருச்சி மலைக்கோட்டையில் குண்டும், குழியுமாக சேதமடைந்த உள்வீதி சாலை

திருச்சி, மார்ச் 16: திருச்சி மலைக்கோட்டையில் உள்வீதி சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளதால் இதில் தாயுமானவ சுவாமி திருவீதியுலா செல்லும்போது சப்பரம் தடுமாறி செல்லும் அவலநிலை ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 13வது வார்டில் மலைக்கோட்டை உள்வீதி உள்ளது. இங்கு தெப்பம், தேர் திருவிழாவின் மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருவீதி உலா இந்த வீதிகளில் தான் நடக்கும். அப்போது கோயில் யானை இந்த வழியாக சுற்றி வரும். கோயிலுக்கு செல்லும் வாகனங்கள் இவ்வழியாகத்தான் சென்று வரும். மலைக்கோட்டைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

சிறப்புமிக்க ஆன்மீக தலமாகவும், சுற்றுலா மையமாகவும் விளங்கும் மலைக்கோட்டையில் வாகனங்கள், பொதுமக்கள் வந்து செல்வதற்கும், சுவாமி திருவீதி உலா செல்வதற்கும் பிராதான சாலையாக உள்ள உள்வீதி சாலை தற்போது பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. இதனால் இந்தசாலையில் திருவீதி உலா புறப்பாடு நடக்கும்போது சப்பரம் தட்டுதடுமாறி சென்று வர வேண்டிய நிலையில் உள்ளது. அதே போல் பக்தர்களும், வாகன ஓட்டிகளும் சேதமடைந்த சாலையில் வந்து செல்ல அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்ைல எனக்கூறப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுத்தலமாகவும், ஆன்மிக ஸ்தலமாகவும் விளங்கும் மலைக்கோட்டையின் உள்வீதி சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: